எகிப்து அதிபருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு; பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
எகிப்தில் அதிபர் அப்துலை சந்தித்த மத்திய மந்திரி ஜெய்சங்கர் பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தியை அவரிடம் வழங்கியுள்ளார்.;
கெய்ரோ,
எகிப்து நாட்டுக்கு இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு சென்ற அவர் அல்-ஹொரேயா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
ஆப்பிரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்கு வகிக்கும் நாடுகளில் ஒன்றாக எகிப்து இருந்து வருகிறது. இதனால் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எகிப்தில் அதிபர் அப்துல் பத்தா எல்-சிசியை மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசினார். இதுபற்றி மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், எகிப்து அதிபர் சிசியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரிடம், பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தியையும் ஒப்படைத்து உள்ளேன் என தெரிவித்து உள்ளார்.
எகிப்தின் வெளியுறவு துறை மந்திரி சமே சவுக்ரை விடுத்த தனிப்பட்ட அழைப்பை ஏற்று சென்றுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர், அவரையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு பற்றியும் அதிபர் சிசியிடம் மத்திய மந்திரி விளக்கி கூறினார்.
இந்தியா மற்றும் எகிப்து ஆகிய சுதந்திர எண்ணம் கொண்ட இரு நாடுகளும், அரசியல், சர்வதேச உறவுகள் மற்றும் சமூக கொள்கைகளில் சர்வதேச பங்காற்றி வருகின்றன. அமைதி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கான முகாந்திரங்களை இரு நாடுகளும் ஊக்குவித்து வருகின்றன என டுவிட்டரில் மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.