மரியுபோல் கொடூரங்களை வெளிக்காட்டிய உக்ரைன் பத்திரிக்கையாளர் மலோலெட்காவுக்கு புகைப்படத்துறையின் உயரிய அங்கீகாரம்!
உக்ரைன் நாட்டை சேர்ந்த புகைப்பட பத்திரிக்கையாளர் எவ்ஜெனி மலோலெட்கா என்பவர் விசா டி'ஓர் பரிசை வென்றுள்ளார்.;
பெர்பிக்னன்[பிரான்ஸ்],
உக்ரைன் நாட்டை சேர்ந்த புகைப்பட பத்திரிக்கையாளர் எவ்ஜெனி மலோலெட்கா என்பவர் விசா டி'ஓர் பரிசை வென்றுள்ளார். இந்த விருது மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாக திகழ்கிறது.
சர்வதேச புகைப்பட இதழியல் திருவிழா ஆகஸ்ட் 27 அன்று தொடங்கியது. அதில் உக்ரைன் போர் மையப்பொருளாக உள்ளது. தெற்கு பிரான்சின் பெர்பிக்னன் நகரில் நடந்த விழாவில் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்ற இரண்டு புகைப்படக்காரர்கள் மார்கஸ் யாம் மற்றும் உக்ரேனிய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியரான டேனியல் பெரெஹுலக் ஆகியோர் ஆவர்.
35 வயதான பத்திரிகையாளர் எவ்ஜெனி மலோலெட்கா, அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் இந்த விருதை வென்ற அவர் உக்ரேனிய மக்களுக்கு தனது பரிசை அர்ப்பணித்தார்.
ரஷிய படைகள் மரியுபோல் நகரை முற்றுகையிட்ட போது அங்குள்ள கள நிலவரத்தை பிரதிபலித்த அவரது சிறந்த பணிக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
ரஷிய படைகள் உக்ரைனில் தக்குதல் தொடங்கும் முன்னர், பிப்ரவரி 23 அன்று மரியுபோல் நகருக்குள் நுழைந்த முதல் பத்திரிகையாளர்களில் எவ்ஜெனி மலோலெட்கா ஒருவர் ஆவார். அவரது சக வீடியோ பத்திரிகையாளர் மிஸ்டிஸ்லாவ் செர்னோவ் உடன் இணைந்து மரியுபோல் சென்றார்.
பின் அங்கிருந்து கடைசியாக வெளியேறியவர்களில் அவரும் ஒருவர். இறுதியாக மார்ச் 15 அன்று நகரத்தை விட்டு வெளியேறினார். அந்த நேரத்தில் ரஷிய குண்டுவெடிப்பு தாக்குதலால் மரியுபோல் முற்றிலும் அழிக்கப்பட்டது.
அவர் அங்கு கழித்த அந்த 20 நாட்கள், ஒரு நீண்ட, முடிவில்லாத நாள் போல, மோசமாகிக் கொண்டே இருந்தது என்று அவர் தெரிவித்தார். அவரது படங்கள் மரியுபோலில் நடந்த மோதலின் முழு கொடூரத்தையும் காட்டின.
அவரது படங்கள் முற்றுகையின் போது கொல்லப்பட்ட குழந்தைகள், குண்டுவெடித்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு மத்தியில் அதிக கர்ப்பிணிப் பெண்கள் கிடப்பதைக் உலகிற்கு காட்டியது குறிப்பிடத்தக்கது.