உக்ரைன் போர்; அமெரிக்கா புதிதாக ரூ.2,672.75 கோடி நிதியுதவி அறிவிப்பு

உக்ரைன் போரில் அந்நாட்டுக்கு அமெரிக்கா புதிதாக ரூ.2,672.75 கோடி நிதியுதவியை அறிவித்து உள்ளது.

Update: 2023-04-20 02:44 GMT

வாஷிங்டன்,

உக்ரைனுக்கு எதிராக கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில், ரஷியா படையெடுத்தது. இந்த போரானது, ஓராண்டுக்கும் மேலான நிலையில், முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. பலரை பலி வாங்கிய இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன.

ரஷியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. மறுபுறம், உக்ரைனுக்கு வேண்டிய நிதி மற்றும் ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தை உள்ளிட்ட பிற முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இதனால், போர் தீவிர நிலையை அடைந்து உள்ளது.

உக்ரைனின் பாக்முத் நகரை கைப்பற்றி விட்டோம் என்றும், ரஷிய கொடியும் நாட்டப்பட்டு விட்டது என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. எனினும், உக்ரைன் போரில் தொடர்ந்து எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் போரில் அந்நாட்டுக்கு அமெரிக்கா புதிதாக ரூ.2,672.75 கோடி நிதியுதவியை அறிவித்து உள்ளது. இதுபற்றி வாய்ஸ் ஆப் அமெரிக்கா வெளியிட்டு உள்ள செய்தியில், உக்ரைனுக்கான புதிய ராணுவ உதவியை அமெரிக்கா அறிவித்து உள்ளது. அவற்றில், பீரங்கிகள் மற்றும் ராக்கெட்டுகள் ஆகியவையும் அடங்கும் என தெரிவித்து உள்ளது.

இதன்படி, பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், பீரங்கிகளை அழிக்கும் கண்ணிவெடிகள் மற்றும் ஏ.டி.-4 எனப்படும் கவச வாகனங்களை அழிக்கும் ஆயுதங்கள் ஆகியவையும் உக்ரைனுக்கு உதவியாக வழங்கப்படும்.

இந்த ஆயுதங்கள், உக்ரைனில் ஆக்கிரமிப்பு செய்து பதுங்கி உள்ள ரஷிய தரை படைகளை விரட்டியடிப்பதற்கு தேவைப்படும் என அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் வாய்ஸ் ஆப் அமெரிக்காவுக்கு அளித்த தகவலில் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி உக்ரைனின் தரை படை தலைவர் கூறும்போது, போரில் ரஷியாவானது, உக்ரைனின் கிழக்கு நகரான பாக்முத் பகுதியில் பெரிய ரக பீரங்கிகளை பயன்படுத்தியும், வான்வழி தாக்குதல்களை தொடுத்தும் வருகிறது.  போரில் ரஷியா முக்கியம் வாய்ந்த தோல்விகளை சந்தித்தபோதும், தொடர்ந்து ரஷியா இவற்றின் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது என கூறியுள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசும்போது, சர்வதேச நாணய நிதியகம் மற்றும் உலக வங்கிகளின் தலைவர்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.  அதில், உலகம் முழுவதும் உள்ள ரஷியாவின் மத்திய வங்கியின் சொத்துகள், நிதிகளை முடக்க வேண்டும் என்றும் அவற்றை கொண்டு உக்ரைனை மறுகட்டமைப்பு செய்ய உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

உக்ரைனில் ஏற்பட்டு உள்ள இழப்புகளை ஈடுகட்டுவதற்காக இந்த நடவடிக்கையை ரஷியாவுக்கு எதிராக எடுக்கும்படி அவர் கேட்டு கொண்டார்.  இந்த நிலையில், உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பு பராபமரிப்பு நடவடிக்கைக்காக ரூ.1644.79 கோடி நிதியுதவியை உலக வங்கி நேற்று அறிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்