ரஷிய ஆக்கிரமிப்பு பகுதியில் உக்ரைன் ராணுவம் தாக்குதல்; 4 பேர் பலி
ரஷிய ஆக்கிரமிப்பு பகுதியில் உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
கீவ்,
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 15 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. இதில் அமெரிக்கா உள்பட நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவுக்கரம் அளித்து வருகிறது.
ரஷிய ராணுவமும் உக்ரைன் மீது தன் ஆக்ரோஷ தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் கீவ் நகர் மீது ரஷியா ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. தொடர் தாக்குதலில் கீவ் நகரம் நிலைகுலைந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தநிலையில் ரஷிய ஆக்கிரமிப்பு மாகாணமான லுகான்ஸ்க் அருகே கர்பாட்டி கிராமத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் ரஷிய வீரர்கள் பதுங்கி இருப்பதாக உக்ரைனுக்கு தகவல் தெரிந்தது. இதனால் அதன் மீது உக்ரைன் ராணுவம் சரமாரி குண்டுமழை பொழிந்தது. இதில் அந்த கட்டிடம் சின்னாபின்னமானது. கட்டிடத்தில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே செத்தனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.