கருங்கடல் வழியாக உக்ரைன் தானிய ஏற்றுமதி தொடங்கியது

போருக்கு மத்தியில் கருங்கடல் வழியாக உக்ரைனின் தானிய ஏற்றுமதி நேற்று தொடங்கியது.

Update: 2022-08-01 22:37 GMT

கோப்புப்படம்

கீவ்,

தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போரை தொடங்கியது. போரின் ஒரு பகுதியாக, கருங்கடல் பகுதியில் போா்க் கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்டுள்ள ரஷியா அந்த கடல் வழியான உக்ரைன் கப்பல் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியது.

உக்ரைன், உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழலில் கருங்கடலில் உள்ள அந்த நாட்டின் உக்ரைன் துறைமுகங்கள் ரஷியாவில் முற்றுகையிடப்பட்டதால் தானிய ஏற்றுமதி தடைப்பட்டது.

ஒப்பந்தத்தில் கையெழுத்து

இதனால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண ஐ.நா.வும், துருக்கி அரசும் முயற்சி மேற்கொண்டன. அதன்படி ஐ.நா. மற்றும் துருக்கியின் ஏற்பாட்டில் உக்ரைன்-ரஷியா இடையே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.

அதன் பலனாக கடந்த மாதம் 22-ந் தேதி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் ஆகியோரின் முன்னிலையில் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷியாவும், உக்ரைனும் தனித்தனியாக கையெழுத்திட்டன.

துறைமுகம் மீது தாக்குதல்

அந்த ஒப்பந்தத்தில் தானிய போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் சரக்குக் கப்பல்கள் மீது துறைமுகத்திலோ, கடல்வழியிலோ தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ரஷியாவும், உக்ரைனும் உறுதியளித்தன.

ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரத்திலேயே கருங்கடலில் உள்ள உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. எனினும் துறைமுகத்தில் உள்ள ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைப்பதாகவும், தானிய ஏற்றுமதியை தடுக்கவில்லை எனவும் ரஷியா கூறியது.

அதேபோல் உக்ரைனும், ஒப்பந்தத்தை மீறி ரஷியா தாக்குதல் நடத்தியிருந்தாலும் தானிய ஏற்றுமதிக்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவித்தது.

சரக்கு கப்பல் புறப்பட்டது

இந்த நிலையில் ஒப்பந்தத்தின்படி கருங்கடல் பகுதி வழியாக தானிய ஏற்றுமதி தொடங்கியதாவும், உக்ரைன் தானியங்கள் ஏற்றப்பட்ட முதல் சரக்கு கப்பல் ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதாகவும் துருக்கி நேற்று அறிவித்தது.

இது குறித்து துருக்கி ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரசோனி என்கிற சரக்கு கப்பல் 26 ஆயிரம் டன் சோளத்தை ஏற்றிக்கொண்டு லெபனானுக்கு புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் இன்று (செவ்வாய்க்கிழமை) துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்தான்புல் வந்ததும், ஒப்பந்தத்தின்படி ஐ.நா. மற்றும் துருக்கி அதிகாரிகள் கப்பலை சோதனை செய்த பிறகு, லெபனானுக்கு செல்ல அனுமதிக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்