பெல்கொரோட் பிராந்தியத்தில் உள்ள ரஷிய வெடிமருந்து கிடங்கை குண்டுவீசி தகர்த்தது உக்ரைன் ஆயுதப்படை!
உக்ரைன் படையினர் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் வெடிமருந்து கிடங்கு முற்றிலும் சேதமடைந்தது என்று பெல்கொரோட் பிராந்திய கவர்னர் கூறினார்.
கீவ்,
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்கள் ஆகியும் போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது நேற்று ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் உக்ரைன் விமானப்படை 25 ரஷிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கருங்கடலுக்கு அருகே கப்பல் கட்டும் மையம் மற்றும் துறைமுகம் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியதாகவும், மைகோலாயின் தெற்கு நகரம் கடுமையான குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் உக்ரைன் ரஷியா எல்லை பகுதியான பெல்கோரோட் பிராந்தியத்தின் ஒரு கிராமத்தில் உள்ள ரஷிய வெடிமருந்து கிடங்கு ஒன்று தகர்க்கப்பட்டது. உக்ரைன் படையினர் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் இந்த கிடங்கு முற்றிலும் சேதமடைந்தது என்று ரஷியாவுக்கு உட்பட்ட பெல்கொரோட் பிராந்தியத்தின் கவர்னர் கூறினார்.
அங்கிருந்த பொதுமக்கள் இப்போது பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்று பெல்கோரோட் பிராந்தியத்தின் கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் கூறினார்.