மாயமான எம்எச்-370 விமானத்தின் மர்மம் விலகுமா..? புதிய திட்டத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து ஆய்வாளர்கள்
ஆஸ்திரேலிய கடற்கரையில் உள்ள நீர் ஒலியியல் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ஆடியோ சிக்னல்கள், எம்எச்-370 விமானத்தை கண்டுபிடிப்பதில் முக்கிய தடயமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச்-370 என்ற பயணிகள் விமானம் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி கோலாலம்பூரில் இருந்து சீனா நோக்கி சென்றபோது காணாமல் போனது. அதில் 227 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என 239 பேர் இருந்தனர். விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் 7-வது வளைவுக்கு அருகில் விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக, சுமார் 120,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தேடியும், விமானம் எந்த இடத்தில் விழுந்தது என்பதை கண்டறிய முடியவில்லை.
ஆப்பிரிக்க கடற்கரைகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் தீவுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளின் பல துண்டுகள் எம்எச்-370 விமானத்தின் துண்டுகள் என உறுதிப்படுத்தப்பட்டன. ஆனால் விமானத்தின் பெரும்பகுதி கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, மாயமான விமானம் குறித்த மர்மம் நீடிக்கிறது.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்-370 காணாமல் போய் 10 ஆண்டுகள் ஆன நிலையில், கார்டிப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மர்மத்தை உடைக்க புதிய திட்டத்துடன் களமிறங்க உள்ளனர். அதாவது, ஆஸ்திரேலிய கடற்கரையில் உள்ள ஒரு நீர் ஒலியியல் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ஆடியோ சிக்னல்கள், எம்எச்-370 விமானத்தை கண்டுபிடிப்பதில் முக்கிய தடயமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புவதாக மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
கார்டிப் பல்கலைக்கழக குழுவின் ஆராய்ச்சி முடிவுகள், சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. காணாமல் போன ஒரு நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட கடந்த 10 விமான விபத்துகளை தொடர்ந்து ஹைட்ரோபோன்களால் பதிவுசெய்யப்பட்ட 100 மணிநேர தரவுகளின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு விமானம் தண்ணீரில் விழுந்து நொறுங்கும்போது வெளிப்படும் பேரொலியானது தண்ணீருக்குள் 3,000 கி.மீ. தொலைவு வரை பயணிக்கும். 3,000 கி.மீ. தொலைவில்கூட ஹைட்ரோபோன்களில் கண்டறியப்பட்ட முந்தைய விமான விபத்துகளின் தெளிவான அழுத்த சிக்னல்களை தங்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் உசாமா காத்ரி தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான எம்.எச்-370 விமானத்தின் பிரதான பாகங்கள் கிடக்கும் பகுதிக்கு நெருக்கமான இடத்தை துல்லியமாக கண்டறிய, 7-வது வளைவில் கடலுக்கடியில் தொடர்ச்சியான குண்டுவெடிப்புகள் அல்லது துப்பாக்கிச் சூடுகளை நடத்த ஆய்வுக்குழு முன்மொழிந்துள்ளது.
இதற்கிடையே, விமானத்தை தேடும் பணியை மீண்டும் தொடங்குவது குறித்து பரிசீலிப்பதாக மலேசிய அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. 'கண்டுபிடிக்காவிட்டால் கட்டணம் வேண்டாம்' என்ற ஒப்பந்தத்தை டெக்சாசைச் சேர்ந்த ஓஷன் இன்பினிட்டி என்ற நிறுவனம் முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.