இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான முதல் சுற்று தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி

இங்கிலாந்தில் புதிய பிரதமருக்கான முதல் சுற்று தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் வெற்றி பெற்றார்.;

Update:2022-07-14 05:01 IST

Image Courtacy: AFP

லண்டன்,

இங்கிலாந்து பிரதமா் போரிஸ் ஜான்சன் தனது பிரதமா் பதவியையும் ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி தலைவா் பதவியையும் கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.

அதைதொடர்ந்து இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்? என்பது உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் முன்னாள் நிதி மந்திரியுமான ரிஷி சுனக், இந்திய வம்சாவளியை சேர்ந்த அட்டா்னி ஜெனரல் சூவெல்லா பிரேவா்மன், பாகிஸ்தானைப் பூா்விகமாக கொண்ட முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித் உள்பட 11 பேர் அறிவித்திருந்தனர்.

முதல் சுற்றில் வெற்றி

இந்த நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும் காலக்கெடு நேற்று முன்தினம் மாலையுடன் முடிந்த நிலையில் சஜித் ஜாவித் உள்பட 3 பேர் போட்டியில் இருந்து பின்வாங்கினர். இதன் மூலம் கட்சித்தலைவர் பதவிக்கான முதற்கட்ட தேர்தலில் 8 போட்டியாளா்கள் இருந்தனா்.

இதன் முதல் சுற்று வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் கன்சா்வேட்டிவ் கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களித்தனா். இதில் 88 வாக்குகள் பெற்ற ரிஷி சுனக் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

வர்த்தக மந்திரி பென்னி மொர்டான்ட் (67 வாக்குகள்), வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் (50), முன்னாள் மந்திரி கெமி படனாக் (40), டாம் டுகெந்தாட் (38) அடுத்தடுத்த இடங்களை பெற்றனர்.

அதேநேரம் மற்றொரு இந்திய வம்சாவளியான சூவெல்லா பிரேவா்மன் 32 வாக்குகள் பெற்று மயிரிழையில் அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றார்.

இன்று 2-ம் சுற்று தேர்தல்

அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு 30 வாக்குகளை பெற வேண்டிய நிலையில், நாதிம் சகாவி, ஜெரிமி ஹண்ட் ஆகியோரும் முறையே 25, 18 வாக்குகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தனர்.

இதில் அடுத்த சுற்று தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் போட்டியாளர்கள் 6 ஆக குறைந்துள்ளனர். இவ்வாறு கடைசி இருவா் தோந்தெடுக்கப்படும் வரை பலசுற்றுகளாக வாக்குப்பதிவு நடைபெறும்.

இறுதிச்சுற்றில் போட்டியிடும் இருவரில் ஒருவரை கட்சியின் சுமாா் 2 லட்சம் உறுப்பினா்கள் தபால் மூலம் வாக்களித்து தேர்ந்தெடுப்பா். அவரே கட்சி தலைவராகவும் பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவாா்.

பிரதமர் போட்டியில் 2 இந்தியர்கள்

அந்த வகையில் புதிய பிரதமராக தோந்தெடுக்கப்படுபவரின் பெயா் வரும் செப்டம்பா் மாதம் 5-ந்தேதி அறிவிக்கப்படும் என்று கன்சா்வேட்டிவ் கட்சியின் தேர்தலை நடத்தும் '1922 குழு' அறிவித்துள்ளது.

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களில் 2 பேர் இந்திய வம்சாவளியினர் என்பது கவனம் ஈர்த்துள்ளது. அவர்கள் இருவரில் ரிஷி சுனக் போட்டியில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ரிஷி சுனக், 'இன்போசிஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015-ல் யார்க்‌ஷயரில் உள்ள ரிச்மண்ட் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான இவர், கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் அந்த நாட்டின் நிதி மந்திரியாக பதவியேற்றார்.

வெற்றி வாய்ப்பு பிரகாசம்

கொரோனா காலத்தில் நிதி மந்திரியாக நாட்டை சிறப்பாக வழிநடத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்றார். எனினும் போரிஸ் ஜான்சான் மீதான அதிருப்தி காரணமாக ரிஷி சுனக் நிதி மந்திரி பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷதா மூர்த்தி வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக ரிஷி சுனக்கின் செல்வாக்கு சரிந்தபோதிலும் தற்போதைய நிலையில் பிரதமர் பதவிக்கான போட்டியில் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்