பிரிட்டனில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பிரிட்டன் பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.

Update: 2024-07-04 09:03 GMT

லண்டன்:

பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மக்கள் ஆர்வமுடன் வாக்களித்துவருகின்றனர்.

பிரதமர் ரிஷி சுனக் தன் மனைவி அக்சதா மூர்த்தியுடன், நார்த் யார்க்க்ஷைரில் உள்ள ரிச்மாண்ட் அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். இதேபோல் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும் தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதுகின்றன. 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர தொழிலாளர் கட்சி தீவிர பிரசாரம் மேற்கொண்டது.

இரு கட்சிகள் சார்பிலும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து பிரிட்டனில் குடியேறியவர்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட முன்பைவிட அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து பிரிட்டனில் குடியேறியவர்களுக்கும், தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி குத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகிய 8 தமிழர்கள் போட்டியிட்டுள்ளனர்..

பிரதமர் ரிஷி சுனக் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர் ஆகியோர் பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். இவர்கள் தவிர நைகல் பரேஜ், ஜான் ஸ்வின்னி, எட் டாவே, கார்லா டெனியர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளில், 326 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியமைக்கும். எந்த கட்சியாலும் மெஜாரிட்டி பெற முடியாவிட்டால், தற்போதைய பிரதமர் ஆட்சியில் தொடரவேண்டும்.

இந்த தேர்தலில் தொழிலாளா் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 1997ல் முன்னாள் தலைவர் டோனி பிளேர் 18 ஆண்டுகால கன்சர்வேடிவ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தபோது, தொழிலாளர் கட்சி பெற்ற சாதனையான 418 இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று சில கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. எனவே, கன்சா்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இன்று இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஒரு சில மணி நேரத்தில் முன்னிலை நிலவரம் வெளியாகி கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்யும். துல்லியமான முடிவுகள் நாளை தெரியவரும்.

அதேசமயம், இன்று வாக்குப்பதிவு முடிந்ததும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகும். இது, இறுதி முடிவு குறித்த வலுவான கணிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்