உகாண்டாவில் எபோலா தொற்று பரவல் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு
உகாண்டாவில் எபோலா தொற்று முடிவுக்கு வந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.;
கம்பாலா,
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அந்நாட்டு அரசு அறிவித்தது. இதுவரை எபோலா தொற்று பாதிப்பால் அங்கு 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
உகாண்டாவில் இதற்கு முன் கடந்த 2000-ம் ஆண்டில் எபோலா நோய் பரவல் ஏற்பட்ட போது, 200 பேர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து 2012-ம் ஆண்டில் எபோலா பரவல் ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு உகாண்டாவில் மீண்டும் எபோலா நோய் பரவல் ஏற்பட்டது.
இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீவிர நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் தற்போது உகாண்டாவில் எபோலா தொற்று முடிவுக்கு வந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உகாண்டாவில் 142 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், இதில் 55 பேர் உயிரிழந்த நிலையில், 87 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று பரவலுக்கு எதிராக உகாண்டா அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, தொடர்ச்சியாக 42 நாட்கள் புதிய எபோலா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லையெனில், எபோலா பரவல் முடிவுக்கு வந்ததாக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.