வியட்நாமை தாக்கிய சூறாவளி புயல்: 14 பேர் பலி

கிட்டத்தட்ட 116,192 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு நன்கு வளர்ந்திருந்த நெல் மற்றும் பழப்பயிர்கள் சேதமடைந்தன.

Update: 2024-09-08 10:35 GMT

ஹனோய்:

வடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி சூறாவளி புயல், நேற்று வியட்நாமை தாக்கியது. வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங்க் ஆகிய பகுதிகளில் மணிக்கு 149 கிமீ வேகத்துடன் புயல் கரை கடந்தது. இதன் காரணமாக பலத்த காற்றுடன் பல மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது.

புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் சுமார் 30 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

விவசாய நிலங்களையும் இந்த புயல் விட்டு வைக்கவில்லை. கிட்டத்தட்ட 116,192 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு நன்கு வளர்ந்திருந்த நெல் மற்றும் பழப்பயிர்கள் சேதமடைந்தன. புயல் காரணமாக 4 விமான நிலையங்கள் மூடப்பட்டன. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. புயல், மழை தொடர்பான விபத்துகளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 176 பேர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் ஹனோயில் வேரோடு சாய்ந்த மரங்கள், விழுந்த விளம்பர பலகைகள், இடிந்து விழுந்த மின்கம்பங்கள் மற்றும் வீடுகளின் கூரைகளை அப்புறப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. சேதமடைந்த கட்டிடங்களை மதிப்பிடும் பணியும் நடைபெறுகிறது. இப்பணியில் ராணுவம், போலீசார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வியட்நாமை தாக்கிய யாகி சூறாவளி புயல், படிப்படியாக வலுவிழந்து இன்று காலையில் வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. வியட்நாமை தாக்கும் முன், தெற்கு சீனா மற்றும் பிலிப்பைன்சில் இந்த புயல் காரணமாக 24 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்