மலேசியாவில் காவல் நிலையம் மீது பயங்கரவாத தாக்குதல்- 2 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு
காவல் நிலையத்தில் புகுந்து மர்ம நபர் தாக்கியதில் 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்ததையத்து, மற்ற காவல் நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
கோலாலம்பூர்:
மலேசியாவின் ஜோகோர் மாநிலம், உலு திரம் நகரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இன்று அதிகாலையில் மர்ம நபர் புகுந்து திடீரென தாக்குதல் நடத்தினான். உடனே சுதாரித்த போலீஸ்காரர்கள், அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டான். அதேசமயம், மர்ம நபர் தாக்கியதில் 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தாக்குதல் நடத்திய நபர் ஜெமா இஸ்லாமியா (ஜே.ஐ.) என்ற போராளிக்குழுவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என காவல்துறை ஐ.ஜி. ரசாருதீன் உசைன் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நபரின் வீட்டில் சோதனை நடத்தியதில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாகவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை பிடித்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
அல்-கொய்தாவுடன் இணைந்த ஆயுதக்குழுவான ஜே.ஐ., இந்தோனேசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் இஸ்லாமிய அரசை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. பாலியில் கடந்த 2002-ம் ஆண்டு 200-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய குண்டுவெடிப்பின் பின்னணியில் இந்த அமைப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.