டுவிட்டரின் பாதுகாப்பு குழுவை கலைத்தார் எலான் மஸ்க்..!!

டுவிட்டரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை எலான் மஸ்க் கலைத்தார்.

Update: 2022-12-13 22:25 GMT

கோப்புப்படம்

சான்பிரான்சிஸ்கோ,

டுவிட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்ரவதை, தற்கொலை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்கிற ஆலோசனை குழு கடந்த 2016-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

100-க்கும் மேற்பட்ட சிவில், மனித உரிமைகள் மற்றும் பிற அமைப்புகளை உள்ளடக்கிய இந்த ஆலோசனை குழு வெறுப்பு, துன்புறுத்தல் மற்றும் பிற தீங்குகளை டுவிட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான நிபுணத்துவத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டுவிட்டரை தன்வசப்படுத்திய எலான் மஸ்க் டுவிட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது டுவிட்டரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை கலைத்து அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த குழு நேற்று முன்தினம் இரவு டுவிட்டர் பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் கூட்டம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக குழு கலைக்கப்படுவதாக இ-மெயில் மூலம் டுவிட்டர் அந்த குழுவுக்கு தெரியப்படுத்தியது.

பாதுகாப்பு குழுவுக்கு அனுப்பப்பட்ட இ-மெயிலில், "டுவிட்டரை பாதுகாப்பான தகவல் தரும் இடமாக மாற்றுவதற்கான எங்கள் பணி முன்னெப்போதையும் விட வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் நகரும். மேலும் இந்த இலக்கை எவ்வாறு அடைவது என்பது குறித்த உங்கள் யோசனைகளை நாங்கள் தொடர்ந்து வரவேற்போம்" என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்