ஜெருசலேமில் இரட்டை ஆணி வெடிகுண்டு தாக்குதல்கள்: ஒருவர் பலி; 22 பேர் காயம்

ஜெருசலேமில் நடந்த இரட்டை ஆணி வெடிகுண்டு தாக்குதல்களில் ஒருவர் பலியானார். 22 பேர் காயமடைந்து உள்ளனர்.

Update: 2022-11-23 08:53 GMT



டெல் அவிவ்,


ஜெருசலேம் நகரில் அடுத்தடுத்து இன்று காலை 2 முறை வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்து உள்ளன. மேற்கு ஜெருசலேம் நகரின் கிவாத் ஷால் பகுதியில், பேருந்து நிறுத்தம் ஒன்றின் நுழைவு வாயிலில் காலை 7 மணியளவில் முதல் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.

இதனை தொடர்ந்து ரமோத் ஜங்சனில், நகரின் நுழைவு வாயில் பகுதியில் 2-வது வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.

எனினும், வெடிகுண்டு தாக்குதல்களில் ஒன்று, பேருந்து ஒன்றின் அருகே கைப்பையில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து ஏற்பட்டு இருக்க கூடும் என போலீசார் சந்தேகம் தெரிவித்து உள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு எந்தவொரு குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

இந்த முதல் தாக்குதலில் ஒருவர் பலியானார். 17 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்குரிய வகையில் மோசமடைந்து உள்ளது. 5 பேர் சற்று தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர். இதுதவிர, 11 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு மவுண்ட் ஸ்கோபஸ் மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

2-வது தாக்குதலில் 5 பேர் காயமடைந்து உள்ளனர். இதில், ஆணிகளை பயன்படுத்தி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. அவர்கள் ஹடாஸ்சா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதன்படி, ஜெருசலேமில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதல்களில் ஒருவர் பலி மற்றும் 22 பேர் காயமடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்