துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
அங்காரா,
துருக்கி நாட்டின் பார்ட்டின் மாகாணம் அமஸ்ரா நகரில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம்போல் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. இதில் சுரங்கத்தில் மிகப்பெரிய அளவில் தீப்பற்றியது. அதை தொடர்ந்து சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.
விடிய விடிய மீட்பு பணிகள் நடந்தபோதும் 40 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தேடுதல் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளதாக துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.