பாகிஸ்தானின் கடன் நெருக்கடிக்கு இம்ரான் கான் அரசே காரணம்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

நாட்டின் பொருளாதார நலன் கருதி பெட்ரோலியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டன. கனத்த இதயத்துடன் வேறு வழியின்றியே இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டது.

Update: 2022-05-28 10:30 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதாக கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) அறிவித்தது.

ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில், இம்ரான்கான், பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார். அதனால், அவற்றுக்கான மானியமாக அரசுக்கு மாதத்துக்கு 60 கோடி டாலர் செலவானது. இதனால், சர்வதேச நிதியம், கடன் திட்டத்தில் மீதி தொகையான 300 கோடி டாலரை நிறுத்தி வைத்து விட்டது.

இப்போதைய சூழலில், சர்வதேச நிதியத்தின் நிபந்தனையால் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 'கிடுகிடு' உயர்வு லிட்டருக்கு தலா ரூ.30 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நாட்டு மக்களுக்கு ஷெபாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை உயர்த்தப்பட்டது குறித்து பேசியதாவது, "நாட்டிற்கு மிகப் பெரிய கடனை வைத்ததோடு, சர்வதேச நாணய நிதியத்துடன் பாதகமான உடன்படிக்கையையும் இம்ரான் கான் அரசு மேற்கொண்டது. மேலும், உண்மைகளை அப்பட்டமாக புறந்தள்ளிவிட்டு இம்ரான் கான் அரசு செயல்பட்டது.

நாட்டின் பொருளாதார நலன் கருதி பெட்ரோலியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டன. கனத்த இதயத்துடன் வேறு வழியின்றியே இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டது. எரிபொருட்கள் மீதான விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அதை சரிகட்ட வரும் பட்ஜெட் அறிக்கையில், அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.2,000 வழங்குவதற்கு ஏற்ப ரூ.7,211 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் நேற்று முன்தினம் முதல் பெட்ரோல் விலை ரூ.179.86-க்கும், டீசல் ரூ.174.15க்கும், மண்ணெண்ணெய் விலை ரூ.155.56க்கும் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்