போர் முனைக்கு நேரில் சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் முனைக்கு நேரில் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

Update: 2022-06-06 10:48 GMT



கீவ்,



உக்ரைனின் பல பகுதிகளில் ரஷிய ராணுவத்தின் தாக்குதல் நீடித்து போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி சண்டை நடைபெறும் போர் முனைக்கு நேரில் சென்று வீரர்களை ஊக்கப்படுத்தினார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொன்பாஸ் நகரில் உள்ள படைகளை சந்தித்து பேசினார். ரஷிய படைகள் ஆக்ரோசமுடன் தாக்குதலில் ஈடுபட்டு வரும் கிழக்கு பகுதியில் அமைந்த தொன்பாஸ் தொழிற்சாலை மண்டலத்தில் ராணுவ முகாம்களுக்கு சென்றார்.

இதேபோன்று, சிவர்ஸ்கை டோனெட்ஸ் ஆற்றின் குறுக்கே அமைந்த லிசிசன்ஸ்க் பகுதிக்கும் சென்று வீரர்களுடன் உரையாடினார்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரில் ரஷிய படைகள் முன்பு கைப்பற்றும் நோக்கில் நுழைந்தன. ஆனால், உக்ரைனிய படைகள் அவர்களை பின்னுக்கு தள்ளி வருகின்றன.

தொன்பாசின் டோனெட்ஸ்க் பகுதியில் இருந்து தென்மேற்கே உள்ள பாக்முத் என்ற இடத்திற்கு சென்ற ஜெலன்ஸ்கி, ராணுவ வீரர்களிடம் பேசினார். அவர் வீரர்களிடம் பேசும்போது, உங்களுடைய சிறந்த பணி, சேவை, எங்கள் அனைவரையும் மற்றும் நமது நாட்டை பாதுகாப்பதற்காக நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கடன்பட்டுள்ளேன். உங்களையும் கவனித்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

இதன்பின் தினசரி ஆற்றும் உரையின் ஒரு பகுதியாக அவர் கூறும்போது, நான் சந்தித்த ஒவ்வொருவரையும், கைகுலுக்கிய, தொடர்பு கொண்டு பேசிய, நான் ஆதரவு அளித்த அனைவரையும் எண்ணி பெருமைப்படுகிறேன் என அவர் கூறியுள்ளார்.

ரஷியாவின் பல மாத குண்டுவீச்சில் அழிந்து போன துறைமுக நகரான மரியுபோலில் இருந்து வெளியேறி தப்பி சென்ற குடியிருப்புவாசிகள் தென்கிழக்கில் அமைந்த ஜபோரிஜ்ஜியா பகுதியில் தங்கியுள்ளனர். அந்த பகுதிக்கு பயணித்து அவர்களை நேரில் சென்று சந்தித்து ஜெலன்ஸ்கி பேசினார்.

இதுபற்றி கூறிய ஜெலன்ஸ்கி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு சொந்த கதை உள்ளது. அதில் பல குடும்பங்கள் ஆண்கள் இன்றி உள்ளன. ஒரு சிலரின் கணவர்கள் போருக்கு சென்றுள்ளனர்.

சிலர் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சிலரது குடும்ப ஆண்கள் துரதிர்ஷ்டவசத்தில் உயிரிழந்து போயுள்ளனர். பெருத்த சோகம். ஒருவருக்கும் வீடில்லை. அன்புக்குரியவர்களும் இல்லை. ஆனால் குழந்தைகளுக்காக நாம் வாழ வேண்டும். நம்மில் உண்மையான நாயகர்கள் அவர்கள் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்