கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த 6 வயது சிறுமி: பத்திரமாக மீட்ட இந்திய வீரர்கள் - துருக்கி மக்கள் கண்ணீர் மல்க நன்றி

தோண்ட தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Update: 2023-02-09 23:00 GMT

அங்காரா,

துருக்கியின் தென்கிழக்கே சிரியா எல்லையை ஒட்டியுள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த 6-ந்தேதி அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த பேரழிவு நிலநடுக்கமும், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகளும் இரு நாட்டையும் உலுக்கி எடுத்தன.

விண்ணை முட்டும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் தரைமட்டமாகி விட்டன. அவற்றை வாழ்விடங்களாக கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் கான்கிரீட் குவியல்களாக மாறிய கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரை விட்டனர்.

இந்த பேரழிவு நிலநடுக்கம் துருக்கியில் மட்டுமே 10 மாகாணங்களை புரட்டிப்போட்டு இருக்கிறது. அங்கு திரும்பிய இடமெல்லாம் மரண ஓலங்களும், பிணக்குவியல்களும், கண்ணீரை வரவழைக்கும் காட்சிகளுமாக உள்ளன.

மலைபோல குவிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளை நீக்கி, அங்கே சிக்கியிருக்கும் மக்களை மீட்கவும், பிணங்களை அகற்றவும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினர் இரவு பகலாக போராடி வருகின்றனர்.

இந்தியா உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாடுகளின் பேரிடர் மீட்பு படைகளையும், நவீன எந்திரங்களையும், ஆம்புலன்ஸ் வாகனங்களையும், மருந்து பொருட்களையும், மோப்ப நாய்கள் அடங்கிய வல்லுனர் குழுவையும் அனுப்பி வைத்து உள்ளன.

அந்தவகையில் 1.10 லட்சத்துக்கு மேற்பட்ட மீட்பு படையினர் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் டிராக்டர்கள், கிரேன்கள், புல்டோசர்கள் உள்பட சுமார் 6 ஆயிரம் வாகனங்கள் களத்தில் உள்ளதாக துருக்கி பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியுள்ளது.

கட்டிட இடிபாடுகளில் இருந்து தோண்ட தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் இரு நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்னும் மீட்பு பணி முடிந்தபாடில்லை. இந்தநிலையில், 6 விமானத்தில் துருக்கி சென்ற 100 இந்திய வீரர்களும் மீட்பு பணியில் இறங்கி உள்ளனர். காசியன்டெப் மாகாணம் நுர்டாகி நகரில் இடிபாடுகளை அகற்றிய நம் வீரர்கள், உயிருக்கு போராடிய 6 வயது சிறுமியை பத்திரமாக மீட்டனர். இந்திய வீரர்களுக்கு துருக்கி மக்கள் நன்றி கூறினர். மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவும் வீரர்களை பாராட்டினார்.

அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம், இயற்கை பேரழிவுகள் மற்றும் பிற வகையான சம்பவங்களுக்குப் மீட்பதில் மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதில் மிகவும் அனுபவமுள்ள அமைப்பான என்.டி.ஆர்.எப் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்