"ரஷியாவை தனிமைப்படுத்த விரும்பும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி சாத்தியமற்றது" - புதின்
உணவு நெருக்கடியை தீர்க்க ரஷியா மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும என ரஷிய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார்.;
டெஹ்ரான்,
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. தற்போது வரை அந்த நாடு மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், ரஷியா மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
ரஷியாவின் தாக்குதலால் உக்ரைனில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷிய தானிய ஏற்றுமதிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், சர்வதேச உணவு சந்தைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உணவு நெருக்கடியை தீர்க்க ரஷியா மீதான தடைகளை நீக்க வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான போருக்கு பிறகு புதின் முதல் முறையாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அவர் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு சென்றார். அங்கு ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, துருக்கி அதிபர் எர்டோகன் ஆகியோரை சந்தித்து பேசினார்.
பின்னர் புதின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு நாங்கள் உதவுவோம். ஆனால் ரஷிய தானிய ஏற்றுமதிக்காக விமான விநியோகம் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வேண்டும். உலக சந்தைகளுக்கு ரஷிய உரங்களை வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளனர்.
அது போன்று சர்வதேச உணவு சந்தைகளில் நிலைமையை மேம்படுத்த அவர்கள் உண்மையாக விரும்பினால் ரஷிய தானியங்களின் ஏற்றுமதி மீதான தடையை மேற்கத்திய நாடுகள் நீக்க வேண்டும். உலகில் இருந்து ரஷியாவை தனிமைப்படுத்த விரும்பும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி, சிறிது அளவு கூட சாத்தியமற்றது."
இவ்வாறு அவர் கூறினார்.