பயங்கரவாதிகள் அணு ஆயுதங்களை வைத்திருக்க எந்த உரிமையும் இல்லை: ரஷியாவை சாடிய ஜெலன்ஸ்கி

பயங்கரவாதிகள் அணு ஆயுதங்களை வைத்திருக்க எந்த உரிமையும் இல்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷியாவை சாடியுள்ளார்.

Update: 2023-09-20 04:55 GMT

நியூயார்க்,

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது, ஒன்றரை ஆண்டை கடந்து நீடித்து வருகிறது. இதில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 78-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ரஷியாவை கடுமையாக தாக்கி பேசினார். ஆக்கிரமிப்பாளர் (ரஷியா) பல விசயங்களை ஆயுதம் ஆக்கி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது என்று கூறினார்.

அந்த விசயங்கள் எங்களுடைய நாட்டுக்கு எதிராக மட்டுமின்றி, உங்களுக்கும் (ஐ.நா. பொது சபை உறுப்பினர்கள்) கூட எதிராக பயன்படுத்தப்படுகிறது என கூறியுள்ளார். பயங்கரவாதிகள் அணு ஆயுதங்களை வைத்திருக்க எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் ரஷியாவை சாடியுள்ளார்.

ரஷியாவின் வாக்னர் என்ற கூலிப்படை அமைப்பின் தலைவர் பிரிகோஜின், விமான விபத்தில் கொல்லப்பட்டதில் புதினுக்கு தொடர்பு உள்ளது என்ற வகையிலும் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார். அவர் கூறும்போது, தீமையை நம்ப முடியாது. புதின் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றின் மீது எவரேனும் பந்தயம் கட்ட முடியுமா? என பிரிகோஜினை கேளுங்கள் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

புதினின் நெருங்கிய கூட்டாளியான பிரிகோஜின் கடந்த ஜூனில் ரஷியாவின் ராணுவ தலைமைக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இது ரஷிய தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

எனினும், ரஷியாவுக்கும், அவருடைய கூலிப்படையினருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட பின்னர் இந்த எதிர்ப்பு திரும்ப பெறப்பட்டது. இது நடந்து சில மாதங்களில் விமான விபத்து ஒன்றில் பிரிகோஜின் உயிரிழந்து போனார். அந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்