கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்த பிரபல பாடகி - கடுமையாக விமர்சித்த எலான் மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிசுக்கு வாக்களிப்பேன் என பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் அறிவித்துள்ளார்.;
வாஷிங்டன்,
அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக, முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக, ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிசுக்கு வாக்களிப்பேன் என பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் அறிவித்துள்ளார். டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையேயான முதல் நேரடி விவாதத்துக்கு பின் டெய்லர் ஸ்விப்ட் இதனை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், "நான் கமலா ஹாரிசுக்கு வாக்களிக்கிறேன். ஏனென்றால் அவர் உரிமைகளுக்காக போராடுகிறார். அவர் ஒரு நிலையான, திறமையான தலைவர் என நான் நினைக்கிறேன். நாம் குழப்பம் இல்லாமல், அமைதியான முறையில் வழிநடத்தப்பட்டால் இந்த நாட்டில் இன்னும் பலவற்றை சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். எனதளவில் ஆய்வு செய்து நான் எனது விருப்பத்தை கூறியுள்ளேன். நீங்கள் வாக்களிப்பதும், தேர்வு செய்வதும் உங்களுடைய விருப்பம் சார்ந்தது. முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்று மட்டும்தான். தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை நினைவில் வைக்க வேண்டும்" என்று அதில் டெய்லர் ஸ்விப்ட் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டெய்லர் ஸ்விப்ட் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அளித்துள்ளதை எலான் மஸ்க் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "நல்லது டெய்லர்... நீங்கள் வெற்றி பெற்றால்... நான் உங்களுக்கு ஒரு குழந்தை தருகிறேன். மேலும், உங்கள் பூனைகளையும் நான் எப்போதும் பாதுகாப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.