சீன போர் கப்பல்கள், விமானங்கள் குவிப்பு - தைவான் ராணுவம் குற்றச்சாட்டு
தைவான் எல்லையில் சீன போர் கப்பல்கள், விமானங்கள் குவித்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
தைபே,
தீவு நாடான தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வரும் வேளையில் கடந்த 2-ந்தேதி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்கு சென்றார்.
அவரை தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமெரிக்காவின் இண்டியானா மாகாண கவர்னர் என அமெரிக்க உயர்மட்ட அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து தைவானுக்கு பயணம் மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா அடிக்கடி தைவானை சுற்றி கடல் மற்றும் வான்பரப்பில் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தங்கள் நாட்டின் எல்லையில் சீனா தனது போர் கப்பல்கள் மற்றும் விமானங்களை குவித்துள்ளதாக தைவான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து தைவான் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீன ராணுவத்தின் 8 விமானம் தாங்கி போர் கப்பல்கள், 25 போர் விமானங்கள் தைவானை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளன. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரும் தைவான் ராணுவம் பதில் நடவடிக்கைக்கு தயாராக உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.