பாகிஸ்தான்: இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு- பாபர் ஆசம் கடும் கண்டனம்
தேசிய ஒற்றுமையை சிதைக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது என வாசிம் அக்ரமும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.;
இஸ்லமாபாத்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் , அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் இன்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. உடனடியாக இம்ரான் கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம், அந்த அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக பாபர் ஆசம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இம்ரான் கான் மீதான கொடூரமான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
வாசிம் அக்ரம் தனது டுவிட்டர் பதிவில், "வஜிராபாத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஆழ்ந்த கவலையடைகிறேன். இம்ரான் மற்றும் அங்குள்ள அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். இந்த சமயத்தில் ஒரு நாடாக நாம் ஒன்றுபட வேண்டும். நமது தேசிய ஒற்றுமையை சிதைக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது" என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது ஹபீசும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.