இலங்கை போராட்டம்: பத்திரிகையாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் - கடும் வருத்தம் தெரிவித்த பிரதமர் விக்ரமசிங்கே!

பத்திரிகையாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடும் வருத்தம் தெரிவித்தார்.;

Update:2022-07-09 21:34 IST

கொழும்பு,

இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டங்களை குறித்த செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடும் வருத்தம் தெரிவிப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்கள், தங்கள் கோபத்தை ஆட்சியாளர்கள் மீது காட்டத்தொடங்கினர். இன்று இலங்கை அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டனர்.

இதனிடையே, இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் தனியார் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்று வரும் போராட்டங்களில் செய்தி சேகரிக்கச் சென்ற இலங்கையின் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர்கள் போலீஸ் அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் நான்கு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்த துயர சம்வம் குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியிருப்பதாவது, 'இலங்கையின் ஜனநாயகத்திற்கு ஊடக சுதந்திரம் மிகவும் முக்கியமானது. எந்தவொரு வன்முறையையும் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிதானத்துடன் செயல்படுமாறு பாதுகாப்புப் படையினரையும் எதிர்ப்பாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.'

இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்