அமெரிக்காவில் கோத்தபய ராஜபக்சே மகன் வீடு முன் இலங்கைவாசிகள் போராட்டம்

அமெரிக்காவில் உள்ள மனோஜ் ராஜபக்சே தனது சொத்துகள் பற்றிய விவரங்களை அறிவிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Update: 2022-07-17 06:13 GMT


லாஸ் ஏஞ்சல்ஸ்,

இலங்கையில் விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறையால் சிக்கி தவித்து வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். இந்த சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி விட்டார். அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில், கோத்தபயா தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு கடந்த 13ந்தேதி காலை ராணுவ விமானத்தில் தப்பி சென்று விட்டார் என தகவல் வெளியானது.

இதன்பின் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார். இலங்கையில் பல வார போராட்டங்களுக்கு பின்னர், கடந்த வியாழ கிழமை இலங்கை அதிபர் கோத்தபயா பதவி விலகினார்.

இதனை தொடர்ந்து இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஒருபுறம் நடந்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மகன் மனோஜ் ராஜபக்சே வசித்து வரும் அவரது வீட்டின் முன் குவிந்த இலங்கைவாசிகளில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிங்கப்பூருக்கு தப்பி சென்ற கோத்தபயாவை நாடு திரும்ப வேண்டும் என அவரிடம் கூறும்படி கோஷங்களையும் எழுப்பினர்.

போராட்டக்காரர்கள் கூறும்போது, அதிபர் பதவியில் இருந்துகோத்தபயா பதவி விலக வேண்டும். அவரிடம் உள்ள பணம் இலங்கை மக்களின் பணம். அதனை திருப்பியளிக்க வேண்டும். நாங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் சன்லேண்ட் பகுதியில் இருக்கிறோம். தற்போது, இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மகன் மனோஜ் ராஜபக்சே வீட்டின் முன் இருக்கிறோம்.

அவரிடம் இலங்கை மக்களிடம் இருந்து திருடப்பட்ட பணம் உள்ளது. அதனை வைத்து இந்த ஆடம்பர சொத்துகளை வாங்கியுள்ளார். இது எங்களுடைய பணம். எங்களுடைய சொத்து என கூறினர்.

ஆனால், டுவிட்டரில் பதவிட்ட இலங்கைவாசிகள் சிலர், மனோஜ் ராஜபக்சே அரசியலில் இல்லை. அமெரிக்காவில் வசிக்கும் அவருக்கு, அவரது தந்தையின் அரசியலுடன் தொடர்பில்லை என தெரிவித்து உள்ளனர்.

ஆனால், போராட்டக்காரர்கள் கூறும்போது, அமெரிக்காவுக்கு முதன்முறையாக மனோஜ் ராஜபக்சே வந்தபோது, தங்குவதற்கு என எந்த இடமும் இல்லை. ஆனால், குறுகிய காலத்தில் பன்மடங்கு மதிப்புள்ள இதுபோன்ற சொத்துகளை அவரால் எப்படி வாங்க முடிந்தது? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

சொத்துகள் பற்றிய விவரங்களை மனோஜ் ராஜபக்சே அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். அப்படி செய்யாவிடில், மனோஜுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்