இலங்கை: 13-வது திருத்த சட்டத்திற்கு ரணில் விக்கிரமசிங்கே ஆதரவு

13-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என இலங்கை அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Update: 2024-01-05 12:38 GMT

கொழும்பு,

இலங்கைத் தமிழர் இனப் பிரச்னையைத் தீர்க்கும் முயற்சியாக, கடந்த 1987-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனேவுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் 13-வது திருத்தச் சட்டம் உருவானது. இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என இலங்கை அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், இலங்கையில் உள்ள தமிழ் சிறுபான்மையினருக்கு அதிகாரப் பகிர்வை அளிக்கும் 13-வது திருத்தச் சட்டத்திற்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜாஃப்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், "13-வது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு மாகாணமும் அதன் வளர்ச்சிக்கான பாதையை உருவாக்க முடியும். இந்த அதிகாரங்களை செயல்படுத்துவதற்கான நேரம் இது" என்று கூறினார்.

முன்னதாக, 13-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் இறுதி முடிவை எட்டுவதற்காக விக்கிரமசிங்கே தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் தோல்வியில் முடிந்தது. சுமார் 30 வருடங்களாக தமிழர் தாயகத்திற்காக போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு 13-வது திருத்தச் சட்டத்தை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்