இலங்கை: பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்த எதிர்க்கட்சி முடிவு
கொழும்புவில் இன்று பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்த எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது.
கொழும்பு,
இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து பாதித்து வருகிறது. விலைவாசி உயர்வும், பொருட்களின் தட்டுப்பாடும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத அரசை கண்டித்து இலங்கையின் பிரபலமான இடதுசாரி கட்சியும், எதிர்க்கட்சிகளில் ஒன்றுமான ஜனதா விமுக்தி பெரமுனா இன்று (வியாழக்கிழமை) தலைநகர் கொழும்புவில் பிரமாண்டமான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.
இந்த போராட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டவும் கட்சி நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியில் தொடர தார்மீக உரிமையை இழந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ள அந்த கட்சி, எனவே நாட்டில் புதிதாக தேர்தல் நடத்துமாறும் வலியுறுத்தி வருகிறது.
கொழும்புவில் பல்வேறு பகுதிகளை உயர்மட்ட பாதுகாப்பு மண்டலங்களாக ரணில் அரசு அறிவித்த பிறகு முதல் முறையாக நடைபெறும் மிகப்பெரிய போராட்டம் இதுவாகும். எனவே இந்த போராட்ட அறிவிப்பு இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.