தென்கொரியா: 2-வது ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவி பரிசோதனை செய்ததில் வெற்றி

தென்கொரியா, 2025-ம் ஆண்டுக்குள் 5 உளவு செயற்கைக்கோள்களை அனுப்ப திட்டமிட்டு இதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றும் ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-04-08 12:08 GMT

சியோல்,

கொரிய அரசுகள், ராணுவ பதற்றங்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொண்டன. ஆனால், அதனை இரு நாடுகளுமே காற்றில் பறக்க விட்டு விட்டன. ஒப்பந்த மீறலில் ஈடுபடும் வகையில் இரு நாடுகளுமே நடவடிக்கைகளை மேற்கொண்டன.

வடகொரியா கடந்த ஆண்டு நவம்பரில் ராணுவ உளவு செயற்கைக்கோளை அனுப்பியதும் தீபகற்ப பகுதியில் பதற்ற நிலை அதிகரித்தது. வடகொரியாவுக்கு போட்டியாக தென்கொரியாவும் தொடர்ந்து ராணுவ உளவு செயற்கைக்கோளை அனுப்புவது என திட்டமிட்டுள்ளது. அதன்பின் தென்கொரியாவும் பரிசோதனையில் ஈடுபட்டது.

கடந்த ஆண்டு இறுதியில் தென்கொரியா மற்றும் வடகொரியா என இரண்டு நாடுகளும் ராணுவ உளவு செயற்கைக்கோளை அனுப்பி பரிசோதனை செய்தன. இதன்படி, வடகொரியா கடந்த ஆண்டு நவம்பரிலும், தென்கொரியா டிசம்பரிலும் முதன்முறையாக ராணுவ உளவு செயற்கைக்கோளை தனித்தனியாக அனுப்பியிருந்தன.

இந்த ராணுவ உளவு செயற்கைக்கோள்கள் ஒருவரை மற்றொருவர் கண்காணிக்கும் திறன்களை ஊக்கப்படுத்தும். தங்களுடைய சொந்த ஏவுகணை தாக்குதல் திறன்களையும் மேம்படுத்தும் என்று அந்த நாடுகள் கூறுகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து தென்கொரிய நேரப்படி, இன்று காலை 2-வது ராணுவ உளவு செயற்கைக்கோளை தென்கொரியா ஏவி பரிசோதனை செய்ததில் வெற்றியடைந்து உள்ளது. கொரிய தீபகற்பத்தில் அமைந்த வடகொரியா மற்றும் தென்கொரியா இடையேயான பகைமைகள் உச்சம் தொட்டுள்ள சூழலில், இந்த பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இதனை தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. இதன்படி, உளவு செயற்கைக்கோள் வட்டபாதைக்குள் நுழைந்துள்ளது. ராக்கெட்டில் இருந்து பிரிந்த பின்னர், தரைப்பகுதியில் அமைந்த கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பும் கொண்டது என தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அந்த அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜியோன் ஹா கியூ செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த செயற்கைக்கோள் பரிசோதனை வெற்றியால், எங்களுடைய ராணுவத்திற்கு கூடுதலாக ஒரு தற்சார்பு கண்காணிப்பு திறன் கிடைத்துள்ளது. எங்களுடைய தாக்குதல் திறனையும் இன்னும் கூடுதலாக வலுப்படுத்தி உள்ளது என கூறியுள்ளார்.

2025-ம் ஆண்டுக்குள் 5 உளவு செயற்கைக்கோள்களை அனுப்ப தென்கொரியா திட்டமிட்டு உள்ளது. இதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு தன்னுடைய சொந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை பயன்படுத்தி, செயற்கைக்கோள் ஒன்றை ஏவி பரிசோதித்து அதனை வட்டபாதையில் நிறுத்தி வெற்றி பெற்றது. இதனால், இந்த பரிசோதனை முயற்சியில் வெற்றி பெற்ற உலகின் 10-வது நாடாக தென்கொரியா உள்ளது.

எனினும், ஏப்ரல் 15-ந்தேதி வடகொரிய நிறுவனரான கிம் 2 சங்கின் பிறந்தநாளை முன்னிட்டு 2-வது உளவு செயற்கைக்கோளை வடகொரியா விரைவில் ஏவ கூடும் என தென்கொரிய பாதுகாப்பு மந்திரி ஷின் ஒன்சிக் இன்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்