ஜப்பானில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு; கடும் பனிப்பொழிவால் மீட்பு பணியில் பாதிப்பு

அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்களால் ஜப்பான் மக்கள் பீதியில் உறைந்தனர்.

Update: 2024-01-07 07:38 GMT

டோக்கியோ,

ஜப்பானின் மேற்கு மாகாணங்களில் புத்தாண்டு தினத்தன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இஷிகாவா மாகாணத்தின் வஜிமா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டன.

அவை 3.2 முதல் 7.5 ரிக்டர் வரை பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெற்று கொள்ளப்பட்டது.

அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்களால் ஜப்பான் மக்கள் பீதியில் உறைந்தனர். நிலநடுக்கத்தால் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன.

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126-ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். இது தவிர, 560 பேர் காயமடைந்துள்ளதாகவும், 222 பேர் மாயமாகியுள்ளதாகவும் கூறினர்.

இஷிகாவா மாகாணத்தின் சுசூவில் இடிந்த வீட்டில் இருந்து 124 மணிநேரத்திற்குப் பிறகு 90 வயதுடைய மூதாட்டி ஒருவர் மீட்கப்பட்டார்.

நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இஷிகாவா மாகாணத்தில் 1,370 வீடுகள் முழுமையாக அழிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடும் பனி காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்படுவதாக அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்