ரஷிய எரிமலையில் ஏறியபோது 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து 6 மலையேற்ற வீரர்கள் பலி

ரஷியாவில் எரிமலையில் ஏறி கொண்டிருந்த மலையேற்ற வீரர்கள் 6 பேர் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தனர்.

Update: 2022-09-04 19:09 GMT


மாஸ்கோ,

மிகப்பெரிய எரிமலை

ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள காம்சட்கா தீபகற்பத்தில் குளூச்செவ்ஸ்கயா சோப்கா என்கிற மிகப்பெரிய எரிமலை ஒன்று உள்ளது.

15,884 அடி உயரம் கொண்ட இந்த எரிமலை யூரேசியாவின் மிக உயரமான எரிமலையாக அறியப்படுகிறது. மேலும் இது ரஷியா மற்றும் பிறநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்களிடம் புகழ்பெற்ற மலைச்சிகரமாகவும் உள்ளது.

இந்த நிலையில் உள்நாட்டை சேர்ந்த 10 மலையேற்ற வீரர்கள் மற்றும் 2 வழிகாட்டிகள் கடந்த 30-ந்தேதி குளூச்செவ்ஸ்கயா சோப்கா எரிமலையில் மலையேறும் பயிற்சியை தொடங்கினர்.

13,000 அடி உயரத்தில்...

4 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் அவர்கள் மலையின் 10,827 அடி உயரத்தை அடைந்தனர். அதை தொடர்ந்து அங்கு அவர்கள் முகாம் அமைத்து ஓய்வு எடுத்தனர்.

பின்னர் அந்த 12 மலையேற்ற வீரர்களில் 9 பேர் மலைச்சிகரத்தை அடைய தொடர்ந்து மலையேற தொடங்கினர். 3 பேர் மட்டும் முகாமில் இருந்தனர்.

இந்த நிலையில் அந்த மலையேற்ற வீரர்கள் 13,000 அடி உயரத்தில் ஏறி கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத விதமாக அவர்களில் 4 பேர் திடீரென கீழே விழுந்தனர்.

6 பேர் உயிரிழப்பு

இதைக்கண்டு சக மலையேற்ற வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் மேலும் 2 மலையேற்ற வீரர்கள் கீழே விழுந்தனர். 13,000 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் மலையேற்ற வீரர்கள் 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் உடனடியாக ஹெலிகாப்டரில் சம்பவ இடத்துக்கு புறப்பட்டனர்.

ஆனால் மோசமான வானிலையின் காரணமாக மீட்பு குழுவால் உடனடியாக அங்கு செல்லமுடியவில்லை.

மீட்பு பணியில் சிக்கல்

இதனால் எரிமலையில் 10,827 அடி உயரத்திலும், 13,000 அடி உயரத்திலும் சிக்கி இருக்கும் 6 மலையேற்ற வீரர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும் அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்