எரிசக்தி உற்பத்தி தொடர்பாக இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்து
சீன அரசு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய நிலையில், இந்தியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கொழும்பு,
இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை உருவாக்குவது தொடர்பாக இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய அரசின் நிதி உதவியுடன் இலங்கையின் நெடுந்தீவு, அனலைத்தீவு மற்றும் நைனாத்தீவு ஆகிய இடங்களில் வரும் 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை உருவாக்க இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக இலங்கை மந்திரி காஞ்சன விஜயசேகரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யூ-சோலார் கிளீன் எனர்ஜி நிறுவனம், இந்த திட்டத்தின் கீழ் 530 கிலோ வாட் காற்றாலை மின்சாரம், 1,700 கிலோ வாட் சூரியசக்தி உள்ளிட்ட எரிசக்தி அமைப்புகளை உருவாக்க உள்ளது. முன்னதாக சீனாவுடன் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டு அரசு வெளியேறிய பிறகு இந்தியாவுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.