கனடா பிரதமரிடம் கோபத்தை வெளிப்படுத்திய சீன அதிபர்: இயல்பான விஷயமாக பார்க்க வேண்டும் - சீனா விளக்கம்!

சீன அதிபர் ஜின்பிங், கனடா பிரதமர் ட்ரூட்டோவிடம் கோபத்தை வெளிப்படுத்திய தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-11-18 01:20 GMT

பீஜிங்,

ஜி 20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்ட்டீன் ட்ரூட்டோவிடம் கோபத்தை வெளிப்படுத்திய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதுதொடர்பான வீடியோவும் தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ ஆகியோர் சந்தித்து கொண்டனர்.மாநாட்டின்போது இரண்டு தலைவர்களும் மூடிய அறைக்குள் பேசிக்கொண்ட விஷயங்கள் ஊடகங்களில் கசிந்தது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் மொழிபெயர்ப்பாளர் உதவியோடு குற்றம் சாட்டிப் பேசினார்.

‛‛இருநாடுகள் இடையே நடக்கும் விவாதங்கள் பற்றிய விபரங்கள் அனைத்தும் செய்தித்தாள்களுக்கு கசிந்துள்ளது. இது சரியானதாக இல்லை. உங்களிடம் நேர்மை இல்லை'' என ஜி ஜின்பிங் கோபமாக கூறினார்.

இதை கேட்ட ஜஸ்ட்டின் ட்ரூடோ, ‛‛கனடாவில் நாங்கள் வெளிப்படை தன்மையை விரும்புகிறோம். இதனை தான் தொடர்ந்து செய்வோம்'' என கூறினார்.

ஆக்கபூர்வமாக சேர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வோம். ஆனால், நாம் உடன்பாடு காணமுடியாத விஷயங்களும் இருக்கும்," என ட்ரூடோ கூறினார்.

அவர் பேசி முடிக்கும் முன்பாகவே குறுக்கிட்ட ஷி ஜின்பிங், "அதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குங்கள்" என்று கூறிவிட்டு ட்ரூடோ கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு நகர்ந்து சென்றார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சிக்கவில்லை என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், "முதலாவதாக, மற்ற நாடுகளின் விவகாரங்களில் சீனா ஒருபோதும் தலையிடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.சீனா வெளிப்படையான பரிமாற்றங்களை ஆதரிக்கிறது. இருதரப்பு உறவுகளை மேம்படுத்த கனடா நடவடிக்கை எடுக்கும் என சீனா நம்புகிறது.

அதிபர் ஜி ஜின்பிங் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பயமுறுத்த அப்படி பேசவில்லை. இது சகஜமான விஷயமாகவே பார்க்கப்பட வேண்டும்" என தெரிவித்தார் .

Tags:    

மேலும் செய்திகள்