அஜர்பைஜான் விமான விபத்து: மன்னிப்பு கேட்டார் ரஷிய அதிபர் புதின்
அஜர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர்.
மாஸ்கோ,
அஜர்பைஜானில் இருந்து ரஷியாவுக்கு புறப்பட்டுச் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் குரோன்ஸி விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் திருப்பி விடப்பட்டது. பின்னர் கஜகஸ்தானில் தரையிறங்க முயற்சித்த போது தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரஷியாவின் ஏவுகணை அல்லது வான் பாதுகாப்பு அமைப்பால் விமானம் விபத்துக்குள்ளானதாக ஊடங்கள் சந்தேகம் கிளப்பி வந்தன. இதற்கிடையே, முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப வெளிப்புற குறுக்கீடு மற்றும் வெளிப்புறத்தில் விமானத்திற்கு பாதிப்பு ஆகிவற்றால் விமானம் விபத்துக்குள்ளானது என அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
இந்த நிலையில், விமான விபத்து தொடர்பாக அஜர்பைஜான் அதிபரிடம் ரஷிய அதிபர் புதின் விளக்கம் அளித்துள்ளதாகவும், விபத்து நடந்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. புதின் தெரிவித்ததாக ரஷிய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"துயரமான சம்பவம் ரஷியாவின் வான் பகுதிக்குள் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடை பிரார்த்திக்கிறேன். விமான விபத்து ஏற்பட்ட நேரத்தில் கிரோஸ்னி, மொஸ்டோக், விளாடிகாவ்காஸ் ஆகியவற்றின் மீது உக்ரைனின் டிரோன்கள் தாக்குதல் நடத்தியது. இதற்கு ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பதிலடி தாக்குதல் நடத்தியது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிக்கையின் எந்த இடத்திலும் புதின் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.