பாலம் உடைந்து விபத்து: 22 இந்திய மாலுமிகள் இருந்ததாக கப்பல் நிறுவனம் தகவல்

அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி ஆற்றில் விழுந்த 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-03-26 22:37 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே 'பிரான்சிஸ் ஸ்காட் கீ' என்ற மிகப்பெரிய பாலம் உள்ளது. 2½ கி.மீ. தூரத்துக்கு 4 வழி பாதையாக அமைந்துள்ள இந்த பாலம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை படாப்ஸ்கோ ஆற்றில் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. சிங்கப்பூர் கொடியேற்றப்பட்ட அந்த கப்பல் இலங்கை நோக்கிபயணித்ததாக தெரிகிறது. கப்பலில் 22 மாலுமிகள் இருந்தனர். அவர்கள் அனைவருமே இந்தியர்கள் ஆவர்.

இந்த நிலையில் 'பிரான்சிஸ் ஸ்காட் கீ' பாலத்தை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதியது. இதில் சரக்கு கப்பலில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

இதனிடையே கப்பல் மோதியதில் 'பிரான்சிஸ் ஸ்காட் கீ' பாலத்தின் பெரும் பகுதி அப்படியே உடைந்து ஆற்றில் விழுந்தது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன.

மேலும் விபத்து நடந்த சமயத்தில் பாலத்தின் ஒரு பகுதியில் பழுது நீக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்ததாகவும், பணியில் ஈடுபட்டிருந்த சில தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த பயங்கர விபத்தால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்பு குழுக்கள் உடனடியாக அங்கு விரைந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டன.

விபத்தில் சிக்கி ஆற்றில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்த 2 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த விபத்தில் 7 பேர் மாயமானதாக தெரிகிறது. அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. எனினும் அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே இந்த விபத்தில் கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 22 பேரும் காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பியதாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பால்டிமோர் துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்