ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார்

சமர்கண்ட் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா அரிப்போவ் வரவேற்றார்.

Update: 2022-09-15 19:07 GMT

தாஷ்கண்ட்,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019 ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக அதன் பிறகு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் 2 நாட்கள் நடைபெறுகிறது.

இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட 15 உலக நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று மாலை தனி விமானம் மூலம் கிளம்பிய பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரை சென்றடைந்தார். அங்கு அவரை உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா அரிப்போவ் விமான நிலையத்தில் வரவேற்றார்.

இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது மோடி உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார். உக்ரைனில் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கிய பிறகு, பிரதமர் மோடி மற்றும் புதின் முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது அவர்கள் ஒட்டுமொத்த வர்த்தகம் மற்றும் ரஷிய உரங்கள் மற்றும் பரஸ்பர உணவுப் பொருட்கள் விற்பனை குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்