கொரோனா பரவலை தடுக்க சீனாவில் பள்ளிக்கூடங்கள் மூடல்

கொரோனா பரவலை தடுக்க சீனாவில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.

Update: 2023-02-23 19:23 GMT

கோப்புப்படம்

பீஜிங்,

சீனாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019-ம் ஆண்டு டிசம்பரில் தோன்றி உலக நாடுகளைப் பதம் பார்த்தது. பல நாடுகள் அந்தத் தொற்றை கட்டுப்படுத்தினாலும், சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக உருமாறிய கொரோனா தாக்கம் அங்கு அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பிற வைரஸ் நோய்கள் பரவலைத் தடுப்பதற்காக பல நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் இந்த வார தொடக்கத்தில் இருந்து மூடப்பட்டுள்ளன.

கடந்த வார இறுதியில் இ-காமர்ஸ் மையமான ஹாங்ஜோவில் ஒரே வகுப்பறையில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது, இதனால் உள்ளூர் கல்வி அதிகாரிகள் திங்கட்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு வகுப்புகளை நிறுத்துமாறு அறிவுறுத்தினர். அங்கு முதல் முறையாக மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போன்று தொழில் நகரமான ஷாங்காயில் ஒரே நேரத்தில் 4 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பலருக்கு இதே போன்ற அறிகுறிகள் தோன்றியதை அடுத்து, ஷாங்காய் ஆரம்பப் பள்ளி வகுப்பில் நேரில் கற்பிப்பதை நிறுத்தி உள்ளனர். ஜேஜியாங் மாகாணம், சீன தலைநகர் பீஜிங் மற்றும் அருகிலுள்ள நகரமான தியான்ஜின் முழுவதும் உள்ள மற்ற பள்ளிகளிலும் காய்ச்சல் பாதிப்புகள் காரணமாக வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்