பாகிஸ்தான் குவாடர் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு: 7 தொழிலாளர்கள் பலி

குவாடரில் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்கு பலுசிஸ்தான் முதல்-மந்திரி சர்ப்ராஸ் புக்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-09 08:59 GMT

கராச்சி,

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குவாடரில் இன்று அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து குவாடர் போலீஸ் நிலைய அதிகாரி மொஹ்சின் அலி கூறுகையில்,

பலுசிஸ்தான் மாகாணத்தின் சுர்பந்தர் பகுதியில் உள்ள குவாடர் துறைமுகத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார். இறந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக குவாடர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தில் இறந்த மற்றும் காயமடைந்த நபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு முடிவெட்டும் கடையில் பணிபுரிந்து வந்தவர்கள் என்றும் பஞ்சாபின் கானேவால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது என்றார்.

குவாடரில் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்கு பலுசிஸ்தான் முதல்-மந்திரி சர்ப்ராஸ் புக்டி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து பலுசிஸ்தான் உள்துறை மந்திரி மிர் ஜியா உல்லா லங்காவ் கூறுகையில், தொழிலாளர்கள் கொல்லப்படுவது கோழைத்தனமான நடவடிக்கை. பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்