'ஒட்டுமொத்த பெண்களுக்கும் பின்னடைவு' - தீர்ப்பு குறித்து ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர்
நடிகர் ஜானி டெப்பிற்கு எதிராக முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.;
வாஷிங்டன்,
பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாப்பாத்திரத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானவர் ஜானி டெப். இவர் 2015-ம் ஆண்டு நடிகை ஆம்பர் ஹேர்ட்டை திருமணம் செய்தார். தன்னை விட 25 வயது குறைவாக இருந்த ஆம்பரை ஜானி காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், 2017-ம் ஆண்டு ஜானி - ஆம்பர் திருமண பந்தம் முறிந்து இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.
இதனிடையே, 2019-ம் ஆண்டு பிரபல அமெரிக்க பத்திரிக்கையான 'தி வாஷிங்டன் போஸ்ட்'-ல் ஆம்பர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இதில், தனது முன்னாள் கணவர் ஜானியின் பெயரை குறிப்பிடாமல் தான் திருமண வாழ்க்கையிலும் அதற்கு முன்னதாகவும் பாலியல் ரீதியில் துன்புறுத்தல்களையும், குடும்ப வன்முறையையும் சந்தித்ததாக கூறியிருந்தார்.
இந்த கட்டுரை உலக அளவில் பேசுபொருளாகி ஆம்பர்கின் முன்னாள் கணவர் ஜானி டெப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், ஆம்பர்கின் கட்டுரைக்கு பின் ஜானிக்கு திரைப்பட வாய்ப்புகளும் மறுக்கப்பட்டது.
இதனை தொடந்து, தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்த ஜானி தனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி ஆம்பர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதிலடியாக ஜானி மீது குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை ஆம்பர் தொடந்தார்.
இந்த வழக்குகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் தீர்ப்பு இன்று வெளியானது. இதில், ஜானி டெப் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டது. ஜானியின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையிலேயே ஆம்பர் கட்டுரை எழுதியதாகவும், ஜானி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
மேலும், பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவதூறு வழக்கு தொடர்ந்த ஆம்பர் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு 80 கோடி ரூபாய் (10.30 மில்லியன் டாலர்) இழப்பீடு வழங்கவும் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
அதேவேளை, ஜானியின் வழக்கறிஞர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தன்னை அவதூறாக பேசியதாக ஆம்பர் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் ஆம்பருக்கு 15 கோடி ரூபாய் (2 மில்லியன் டாலர்) நஷ்ட ஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனாலும், ஒட்டுமொத்தமாக ஆம்பர் தொடந்த வழக்கில் ஜானிக்கு ஆதரவான தீர்ப்பே வெளியானது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தீர்ப்பு ஒட்டுமொத்த பெண்களுக்கும் பின்னடைவு என ஆம்பர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தீர்ப்பிற்கு பின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் இன்று வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு ஏமாற்றப்பட்டதாக உணருகிறேன். மலையளவு ஆதாரம் இருந்தபோதும் அதிகாரம், ஆதிக்கத்தை கொண்ட எனது முன்னாள் கணவருக்கு எதிராக போதுமானதாக இல்லாததால் என் மனம் உடைந்துவிட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பு மற்ற பெண்களுக்கு எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். ஒட்டுமொத்த பெண்களுக்கு இந்த தீர்ப்பு பின்னடைவு. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற நினைப்பாட்டிற்கு இந்த தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தும்' என்றார்.
இதையும் படிக்க... முன்னாள் மனைவிக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கு: நடிகர் ஜானி டெப் வெற்றி...!