சொந்த நகரத்தின் மீதே தவறுதலாக குண்டு வீசிய ரஷிய போர் விமானம்

ரஷிய விமானத்தில் இருந்து பாய்ந்த குண்டுகள் உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பெல்கோரேட் நகர் மீது விழுந்தது.

Update: 2023-04-21 11:23 GMT

Image Courtesy : AFP

மாஸ்கோ,

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. ஓராண்டு கடந்த பின்னரும் இருதரப்பிலும் தாக்குதல்கள் நடந்த வண்ணம் உள்ளது. இந்த போரால் ரஷியா மற்றும் உக்ரைனில் பெரும் அளவிலான உயிர் சேதங்களும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் மீது வான் வழித்தாக்குதல் நடத்துவதற்காக நேற்றைய தினம் ரஷியாவின் அதிநவீன போர் விமானங்கள் சீறிப் பாய்ந்தன. உக்ரைன் எல்லையில் குண்டு வீசுவதற்காக இந்த விமானங்கள் பறந்து சென்றன. இதில் சுகோய்-34 வகை விமானம் ஒன்று உக்ரைன் எல்லைக்கு தாக்குதல் நடத்த புறப்பட்டு சென்றது.

புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் உக்ரைன் எல்லையை சென்றடைந்தது. எல்லையை நெருங்கியதும் விமானம் தாக்குதலில் ஈடுபட்டது. ஆனால் விமானத்தில் இருந்து சீறிப் பாய்ந்த குண்டுகள் உக்ரைனுக்கு பதில் உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பெல்கோரேட் நகர் மீது விழுந்தது.

இந்த தாக்குதலில் பெல்கோரேட் நகரின் வீதிகளில் சுமார் 20 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. சில கட்டிடங்கள் இடிந்த நிலையில், 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து ரஷிய ராணுவ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ரஷிய நகர் மீது தவறுதலாக தாக்குதல் நடந்து விட்டது தெரியவந்தது. இதனை ரஷிய ராணுவ உயர் அதிகாரிகள் அதிகாரபூர்வமாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்