உக்ரைன் தலைநகரில் ரஷியா மீண்டும் 'டிரோன்' தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா மீண்டும் ‘டிரோன்’ தாக்குதல் நடத்தியது.
கீவ்,
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போரை தொடங்கிய ரஷியா தலைநகர் கீவை கைப்பற்ற தீவிரமாக முயன்றது. ஆனால் உக்ரைன் ராணுவம் அதனை முறியடித்தது. இதனால் ரஷிய படைகள் கீவ் நகரில் இருந்து பின்வாங்கின.
இந்த சூழலில் பல மாதங்களாக உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் போர் தீவிரமாக இருந்து வந்த நிலையில், தற்போது ரஷிய படைகள் தங்களின் முழு கவனத்தையும் கீவ் நகர் மீது திருப்பியுள்ளன.
அந்த வகையில் கடந்த சில நாட்களாக கீவ் நகர் மீது ஏவுகணை மற்றும் வெடிகுண்டு டிரோன்களை கொண்டு ரஷியா சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
சரமாரி டிரோன் தாக்குதல்
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் கீவ் நகரில் ரஷிய படைகள் டிரோன்கள் மூலம் சரமாரியாக தாக்குதல் நடத்தின. ஈரானிடம் இருந்து பெறப்பட்டதாக கூறப்படும் வெடிகுண்டு டிரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷிய கீவ் நகரை நோக்கி டஜன் கணக்கான ஏவுகணைகளை அனுப்பியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.
எனினும் ரஷியாவின் இந்த டிரோன் தாக்குதல் கீவ் நகரில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்த டிரோன் தாக்குதலால் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.