ரஷியாவுக்கு எதிரான போரை சமாளிக்க உக்ரைனுக்கு ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவி - கனடா அறிவிப்பு
ரஷியாவுக்கு எதிரான போரை சமாளிக்க உக்ரைனுக்கு ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவி வழங்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது.
ஒட்டாவா,
உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு முதல் முறையாக கனடா சென்றுள்ள ஜெலன்ஸ்கி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். கனடா அரசு வழங்கிய ராணுவ உதவி மற்றும் பொருளாதார உதவிகளால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்ததற்காக கனடா அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரோடோ பேசுகையில், "நேட்டோ உள்ளிட்ட நமது கூட்டாளிகளுடன் இணைந்து உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம். ரஷியாவுக்கு எதிரான போரை சமாளிக்க ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைனை வழங்க உள்ளோம். உக்ரைன் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் வகையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.