உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்கினால்... மேற்கத்திய நாடுகளுக்கு ரஷியா எச்சரிக்கை
உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்கினால் பெரிய ஆபத்துகளை சந்திக்க நேரடும் என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷியா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மாஸ்கோ,
ரஷியாவின் வெளியுறவு துறை துணை மந்திரி அலெக்சாண்டர் கிரஷ்கோ அந்நாட்டின் 31-வது வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான கவுன்சில் கூட்டத்தின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.
அப்போது, உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கினால் என்ன செய்வீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறும்போது, மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக போர் சூழலை அதிகரிக்கும் வகையிலான நிலைப்பாட்டை எடுக்கும் நிகழ்வை நாம் காண முடிகின்றது.
இதனால், அவர்களுக்கு பெரிய அளவிலான ஆபத்துகள் ஏற்பட கூடும். நாங்கள் திட்டமிடும்போது, இவையெல்லாம் கணக்கில் கொள்ளப்படும். எங்களது இலக்குகளை அடைய அனைத்து தேவையான விசயங்களையும் நாங்கள் வைத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் சட்டவிரோத போருக்கு எதிராக ஒன்றாக நிற்போம் என ஜி-7 நாடுகள் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதுதவிர, உக்ரைனிய விமானிகளுக்கு, எப்-16 ரக போர் விமானங்கள் உள்பட 4-ம் தலைமுறை விமானம் பற்றிய பயிற்சியை, எங்களது கூட்டணி நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுடன் அமெரிக்காவும் கூட்டு முயற்சியாக இணைந்து, உக்ரைனுக்கு உதவும் வகையில் வழங்கும் என கூறினார்.
எனினும், இந்த போர் பயிற்சி அமெரிக்காவில் நடைபெறாது என்றும் அது ஐரோப்பிய பகுதியில் நடைபெற கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், ரஷியா தனது எச்சரிக்கையை விடுத்து உள்ளது.