#லைவ் அப்டேட்ஸ்: மரியுபோல் நகரில் 200 உடல்கள் கண்டெடுப்பு
மரியுபோல் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிபாடுகளில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஜெலன்ஸ்கிக்கு செல்வாக்கு
உக்ரைனில் ரஷியாவசம் போய்விட்ட கெர்சன் நகரில் ரஷிய மொழி அரசு மொழியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பள்ளி, பல்கலைக்கழகங்களில் ரஷிய மொழியில் பாடங்கள் கற்பிக்கப்படும். ஆனால் பெற்றோர்கள் வேண்டுகோளின்பேரில் உக்ரைனிய மொழியிலும் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால் உலக அளவில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பிரபலமாகி வருகிறார். அவர், அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் உலகின் மிகுந்த செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ரஷிய அதிபர் புதினும் இடம் பெற்றிருக்கிறார்.
கிழக்கு உக்ரைனில் தீவிர தாக்குதல்
கிழக்கு உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் டொனெட்ஸ்க் பகுதியில் சுவிட்லோடர்ஸ்க் என்ற நகரத்தை ரஷிய படைகள் நேற்று கைப்பற்றி உள்ளன.
செவிரோடொனெட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் நகரங்களில் ரஷிய படைகள் கடும் குண்டுவீச்சை நடத்தி வருவதாக லுஹான்ஸ்க் கவர்னர் செர்கிய் ஹைடய் தெரிவித்துள்ளார்.
டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய படைகளின் தாக்குதல், இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஐரோப்பிய மண்ணில் நடத்தப்படுகிற மிகப்பெரிய தாக்குதல் ஆகும் என்று உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
3 மாதங்கள் முடிவு
நேட்டோ என்னும் பாதுகாப்பு கூட்டணியில் சேர விரும்பிய உக்ரைனுக்கு எதிராக ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போரை தொடங்கியது. ராணுவ கட்டமைப்புகள் மீதான சிறப்பு நடவடிக்கை என்ற பெயரில் போரைத் தொடங்கினாலும் அவற்றையும் தாண்டி அடுக்கு மாடி குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் என தாக்குதலை விரிவுபடுத்தியது.
இந்த போர் தொடங்கி 3 மாதங்கள் முடிந்துள்ளது.
200 உடல்கள் கண்டெடுப்பு
தலைநகர் கீவை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெறாதபோதும், முக்கிய துறைமுக நகரான மரியுபோலை ஒருவழியாக ரஷியா முற்றிலுமாக கைப்பற்றி விட்டது. 3 மாத கால போரில் இந்த நகரத்தின் கட்டிடங்கள், ரஷிய படைகளின் தாக்குதலில் எலும்புக்கூடுகளாக காட்சியளிக்கின்றன.
இந்த நகரத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் இடிபாடுகளில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
ரஷியா முழுமையான போரை தொடுத்துள்ளது என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ள நிலையில், 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு ஆதாரமாகி உள்ளது.
ஐரோப்பா கண்டத்தில் 77 ஆண்டு கால வரலாற்றில் இப்படி ஒரு போர் நடந்தது இல்லை என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.