லைவ் அப்டேட்ஸ்: ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்தது ரஷியா!

உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 4-வது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது.

Update: 2022-05-25 05:25 GMT

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போரைத் தொடங்கியது. 3 மாதமாக இந்தப் போர் நீடித்து வருகிறது. உக்ரைன் போர் குறித்த அண்மைச்செய்திகளை கீழ் காணலாம்.

Live Updates
2022-05-25 14:56 GMT

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷியா ரத்து செய்துள்ளது

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷியா ரத்து செய்துள்ளது. ரஷிய நாடாளுமன்றத்தில் இன்று இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, இராணுவத்தில் சேரும் தொழில்முறை வீரர்களுக்கான வயது வரம்புகளை நீக்கும் மசோதாவை ரஷிய நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றியுள்ளனர். இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ரஷியர்களின் வயது வரம்பு 40 என நிர்ணயிக்கப்பட்டிருந்ததை ரத்து செய்வதற்கான மசோதா இதுவாகும். ரஷிய ராணுவத்தில் ஆட்சேர்ப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழியாக இந்த முடிவு பார்க்கப்படுகிறது.

பழைய ஆட்சேர்ப்பு நடைமுறையின்படி ராணுவத்தில் சேர்க்கப்பட்டால், துல்லியமான ஆயுதங்களை இயக்குவதற்கு அல்லது பொறியியல் அல்லது மருத்துவப் பணிகளில் பணியாற்றுவதற்கு ஏற்றதாக இருக்கும்.ஆனால், இந்த நடவடிக்கையானது தேவைக்கு ஏற்ற, சிறப்பு தகுதி மற்றும் திறன் உள்ளவர்களை பணியமர்த்துவதை எளிதாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் நடைபெற்று வரும் போரில், விருப்பமுள்ள தன்னார்வ ஒப்பந்த வீரர்கள் மட்டுமே சண்டையிட அனுப்பப்படுகிறார்கள் என்று ரஷிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய மசோதா படி, இன்னும் இளம் வீரர்கள் நிறைய பேரை ராணுவத்தில் இணைத்து கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், ரஷிய இராணுவம் தன்னார்வலர்களை அதிகளவில் நம்பியுள்ளது. அங்கு 18-27 வயதுடைய அனைத்து ஆண்களும், ஒரு வருட கட்டாய இராணுவ சேவைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், பலர் பல காரணங்கள் தெரிவிப்பதால், அவர்களுக்கு இந்த நடைமுறையில் இருந்து விலக்களிப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2022-05-25 11:51 GMT

உக்ரைனிலிருந்து கப்பல் வழியாக உணவு ஏற்றுமதியை அனுமதிக்க தயார் - ரஷியா

உக்ரைனில் மனிதாபிமான உணவு வழித்தடங்களை வழங்க ரஷியா தயாராக உள்ளது என அந்நாட்டு துணை வெளியுறவு மந்திரி ஆண்ட்ரே ருடென்கோ தெரிவித்தார். உக்ரைனின் கருங்கடலில் உள்ள துறைமுகங்கள் போருக்குப் பிறகு ரஷியாவால் முடக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, உக்ரைனில் 20 மில்லியன் டன்களுக்கும் அதிகமான தானியங்கள் கிடங்குகளில் சிக்கியுள்ளன. உக்ரைனில் இருந்து உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு மனிதாபிமான உணவு வழித்தடங்களை உருவாக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ தெரிவித்தார். 

2022-05-25 06:35 GMT

உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலை ரஷியா முழுமையாக கைப்பற்றியது. 3 மாத கால போரில் இந்த நகரத்தின் கட்டிடங்கள், ரஷிய படைகளின் தாக்குதலில் எலும்புக்கூடுகளாக காட்சியளிக்கின்றன.

இந்த நகரத்தில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

2022-05-25 05:26 GMT

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் தப்பித்ததாகவும் உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது வயிற்றில் இருந்து திரவத்தை அகற்ற சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவின் தலைவர் கைரைலோ புடானோவ் கூறியதாவது: ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கு இடையே உள்ள கருங்கடலுக்கும், ரஷியாவின் காஸ்பியன் கடலுக்கும் இடையே உள்ள காகசஸ் என்ற இடத்தில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி நடந்தது. பிப்., 24ல் உக்ரைன் மீது ரஷியா போர் துவங்கிய பின் இந்த முயற்சி நடந்தது. அதில் புடின் மீது தாக்குதல் நடந்தது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்