தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை; 4 பேருக்கு ஓராண்டு சிறை - இலங்கை கோர்ட்டு உத்தரவு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 மீனவர்களில், 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு,
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் கடந்த மாதம் 23-ந்தேதி இலங்கை நெடுந்தீவு அருகே உள்ள கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்கள் 16 பேரும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களில் 12 பேரை மட்டும் விடுதலை செய்துள்ள இலங்கை கோர்ட்டு, மீதம் உள்ள 4 மீனவர்கள் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டி, அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.