கிரீமியாவில் உக்ரைன் படைகள் தாக்குதல்: தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை நிறுத்தியது ரஷியா

கிரீமியாவில் உக்ரைன் படைகள் தாக்குதல் எதிரொலியாக, தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை ரஷியா நிறுத்தி உள்ளது.

Update: 2022-10-30 20:57 GMT

கோப்புப்படம்

மாஸ்கோ,

உக்ரைன், உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழலில் அந்த நாட்டின் மீதான ரஷிய படையெடுப்பால் தானிய ஏற்றுமதி தடைப்பட்டது. இதனால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து ஐ.நா. மற்றும் துருக்கியின் ஏற்பாட்டில் கடந்த ஜூலை மாதம் உக்ரைன்-ரஷியா இடையே தானிய ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில் தானிய போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் சரக்குக் கப்பல்கள் மீது துறைமுகத்திலோ, கடல்வழியிலோ தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ரஷியாவும், உக்ரைனும் உறுதியளித்தன. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் போருக்கு நடுவே உக்ரைனின் தானியங்கள் கருங்கடல் வழியாக சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

இந்த சூழலில் நேற்று முன்தினம் ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரீமியாவில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் கருங்கடலில் சென்று கொண்டிருந்த ரஷிய தானிய கப்பல் சேதம் அடைந்ததாகவும் ரஷியா பரபரப்பு குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் அதை மறுத்தது.

இந்த நிலையில் ரஷிய தானிய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக உக்ரைனுடனான தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக ரஷியா அறிவித்துள்ளது. ரஷியாவின் இந்த அறிவிப்பால் தானிய ஏற்றுமதி தடைப்பட்டு மீண்டும் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்