உக்ரைன் போரில் மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷியா

உக்ரைன் போரில் மரியுபோல் நகரை ரஷியா முழுமையாக கைப்பற்றி உள்ளது. இது ரஷியாவுக்கு மிகப்பெரிய வெற்றி ஆகும்.

Update: 2022-05-21 16:40 GMT

மரியுபோலை முற்றிலும் கைப்பற்றியது

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போரைத் தொடங்கியது. 3 மாதமாக இந்தப் போர் நீடித்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றும் ரஷியாவின் கனவு பலிக்கவில்லை. ஆனால் அதன் மற்றொரு முக்கிய நகரமான மரியுபோல் நகரை கைப்பற்றும் கனவு நிறைவேறி உள்ளது. அந்த நகரை ஏற்கனவே கைப்பற்றியதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். அங்கு போர் தொடங்கிய நாள் முதல் முற்றுகையிட்டு, ரஷிய படைகள் நடத்திய தாக்குதல் அந்த நகரை உருக்குலைந்து போகச்செய்தது. அந்த நகரின் கடைசி கோட்டையாக விளங்கிய அஜோவ் உருக்காலையைக் காத்துக்கொண்டிருந்த 2,439 உக்ரைன் படைவீரர்களும் சரண் அடைந்து விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது.

சரண் அடைந்தவர்களில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் முன்னாள் தண்டனை காலனிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் மரியுபோல் முற்றிலும் கைப்பற்றப்பட்டு விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. மரியுபோல் நகரம் முற்றிலும் விடுவிக்கப்பட்டு விட்டதாக ரஷிய அதிபர் புதினிடம், அந்த நாட்டின் ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார். இது ரஷிய நாட்டுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி ஆகும்.

ஏவுகணை தாக்குதல்

கார்கிவ் பிராந்தியத்தில் லோஜோவில் உளள கலாசார மையத்தினை ஏவுகணை தாக்குதல் நடத்தி ரஷிய படைகள் தரை மட்டம் ஆக்கின. இதில் 11 வயதான ஒரு குழந்தை உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, இது முற்றிலும் தீய செயல் என குறிப்பிட்டார்.

உக்ரைனுக்கு ரூ.3 லட்சம் கோடி

உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 40 பில்லியன் டாலர் உதவியை (சுமார் ரூ.3 லட்சம் கோடி) வழங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மசோதா நிறைவேறியது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டார். இதற்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

உக்ரைனுக்கு மேலும் 9.5 பில்லியன் டாலர் நிதி (சுமார் ரூ.71 ஆயிரத்து 250 கோடி) வழங்க ஜி-7 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

உக்ரைன் போர் எப்போது முடியும்?

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அங்குள்ள ஒரு டெலிவிஷன் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உக்ரைன் போரில் ரத்தக்களறி ஏற்படுகிறது. தாக்குதல் தொடர்கிறது.

போர் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையேயான பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ராஜ்ய ரீதியில் (பேச்சு வார்த்தை மூலம்)தான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

போர்க்களத்தில் உக்ரைன் வெற்றி பெற்றாலும், பேச்சு வார்த்தைக்குப்பின்னர்தான் போர் செயல்பாடுகள் முடிவுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்லாந்துக்கு எரிவாயு நிறுத்தம்

கெர்சன் நகரில் இருந்து மக்கள் வெளியேறி, உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிக்கு செல்வதற்கு விடாமல் ரஷிய படைகள் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கெர்சன் பிராந்தியத்தில் உள்ள கிராமங்கள் மனித நேய நெருக்கடிக்கு ஆளாகும் அபாயம் எழுந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷியாவிடம் இயற்கை எரிவாயு வினியோகத்துக்கான பணத்தை ரஷிய பணமான ரூபிளில் பின்லாந்து தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பின்லாந்துக்கான எரிவாயு வினியோகத்தை ரஷியா நிறுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்