லைவ் அப்டேட்ஸ்: மரியுபோல் நகரின் 2 கட்டிடங்களில் இருந்து 100 உடல்கள் மீட்பு
உக்ரைனின் மரியுபோல் நகரில் 2 கட்டிடங்களில் இருந்து 100 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என நகர மேயரின் உதவியாளர் கூறியுள்ளார்.
கீவ்,
உக்ரைன் மீது ரஷியா 106-வது நாளாக போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல நாடுகள் முயற்சித்த போதும் அவை தோல்வியில் முடிந்தன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதன் காரணமாக உக்ரைன் - ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், போர் தொடங்கியது முதல் உக்ரைன் மீது 2 ஆயிரத்து 100 ஏவுகணைகளை ரஷியா ஏவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைஸ்கார்ட் என்ற அமைப்பு சேரித்த தகவல்களின் அடிப்படையில் உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதல்களின் விவரம் வெளியாகியுள்ளது.
இதில், 600 ஆயிரத்திற்கும் அதிகமான ஏவுகணைகள் பெலாரசில் இருந்து உக்ரைன் மீது ஏவப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உக்ரைனின் பல நகரங்களை ரஷிய படையினரின் ஏவுகணைகள் குண்டு வீசி அழித்து வருகின்றன. இந்நிலையில், மரியுபோல் நகர மேயரின் உதவியாளர் பெட்ரோ ஆண்டிரியுசெங்கோ கூறும்போது, ரஷ்யா நடத்திய தாக்குதலில் 5 வானளாவிய கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன.
அவற்றில் 2 கட்டிடங்களில் நடந்த தேடுதல் பணியில் 50 முதல் 100 உடல்கள் வரை மீட்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து தாக்குதலில் மரணங்கள் அதிகரித்து வருகின்றன என கூறியுள்ளார்.
இதேபோன்று, லுகான்ஸ்க் நகர கவர்னர் கூறும்போது, சிவிரோடொனெட்ஸ்க் பகுதியை ரஷிய படைகள் பெரிய அளவில் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன என கூறியுள்ளார். தொன்பாஸ் நகரின் விதியானது முடிவு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது என உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.