"கெர்சன் நகரில் 400-க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்களில் ரஷியா ஈடுபட்டுள்ளது" - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ரஷிய கட்டுப்பாடில் உள்ள உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்களை மீட்பேன் என நாட்டு மக்களுக்கு ஜெலன்ஸ்கி உறுதியளித்தார்.

Update: 2022-11-13 22:25 GMT

கீவ்,

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இதற்கு உக்ரைன் பாதுகாப்பு படை தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இதனிடையே உக்ரைனின் கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. இந்த நகரங்களை மீட்க உக்ரைன் படை கடுமையாக சண்டையிட்டு வந்தது. இந்த நிலையில் கெர்சன் நகரில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதாக ரஷியா அறிவித்தது.

இதையடுத்து கெர்சன் நகரில் இருந்து ரஷிய படைகள் வெளியேறின. ரஷிய படைகள் வெளியேறியதையடுத்து கெர்சன் நகருக்குள் உக்ரைன் ராணுவம் நுழைந்தது. மேலும் கெர்சனில் வசித்த மக்களும் அந்நகருக்குள் மீண்டும் வந்தனர். அதோடு அங்கு பறந்த ரஷிய கொடிகளை கீழே இறக்கிவிட்டு உக்ரைன் தேசிய கொடியை ஏற்றினர்.

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷிய கட்டுப்பாடில் உள்ள உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்களை மீட்பேன் என உறுதியளித்தார். மேலும் கெர்சன் நகரில் சட்ட திட்டங்களை அமல்படுத்துதல், நகர சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

அதே சமயம் ரஷியாவிடம் இருந்து மீட்கப்பட்ட கெர்சன் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம், சுமார் 400-க்கும் மேற்பட்ட போர் குற்றங்களில் ரஷியா ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளதாக ஜெலன்ஸ்கி கூறினார். ரஷியா மற்றும் உக்ரைன் படை வீரர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உயிரற்ற உடல்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், போர்குற்றங்களில் ஈடுபடும் ரஷிய வீரர்களை கைது செய்யும் பணி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்