ரஷிய அதிபர் தேர்தல்: 11 நேர மண்டலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது
வெளிநாடுகளில் வாழும் ரஷியர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களுக்கு சென்று வாக்களிக்கிறார்கள்.;
மாஸ்கோ:
ரஷியாவில் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தவண்ணம் உள்ளனர். ரஷிய பகுதிகள் மற்றும் ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக வாக்களிக்கின்றனர்.
ரஷியாவின் 11 நேர மண்டலங்களிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதேபோல் வெளிநாடுகளில் வாழும் ரஷியர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களுக்கு சென்று வாக்களிக்கிறார்கள். மின்னஞ்சல் வாயிலாகவும் வாக்களிக்கிறார்கள். வெளிநாடுகளில் முன்கூட்டியே வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது.
இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் போட்டியிடுகிறார். இவரைத் தவிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் நிகோலாய் கரிடோனோவ், தேசியவாத லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் லியோனிட் ஸ்லட்ஸ்கி மற்றும் புதிய மக்கள் கட்சியின் விளாடிஸ்லாவ் டாவன்கோவ் ஆகியோரும் களத்தில் உள்ளனர். இந்த கட்சிகள் கிரெம்ளின் மாளிகை மற்றும் அதன் கொள்கைகளை ஆதரிக்கின்றன.
தேர்தலில் 4 முனை போட்டி இருந்தாலும், புதின் மீண்டும் வெற்றி பெற்று 5-வது முறையாக அதிபராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 3 நாட்கள் அதாவது நாளை மறுநாள் வரை (மார்ச் 17) நடைபெற உள்ளது. தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை மறுநாள் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும். வெற்றி பெறும் வேட்பாளர், மே மாதம் அதிபராக பதவியேற்பார்.